நாயகவிம்பத்தின் சிதைவுகள்

 




நாயகன் என்ற கதாபாத்திரத்தூடாக விம்ப மேலாதிக்கம், தமிழ் சினிமாவில் நிறுவப்படுவதை பல ஆண்டுகள் பார்த்துவருகின்றோம்இவ்வாறு கட்டமைக்கப்படும் ‘’நாயக விம்பம்’’ சினிமாவின் ஆன்மாவை சிதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றதுஅத்தோடு சமூகத்தில் மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளை விதைப்பதையும் பாலின ஒடுக்குமுறைகளை எவ்வாறு தோற்றுவித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். மக்களுடைய ரசனையை மழுக்கடித்த பெருமை இத்தகைய சினிமாக்களுக்கே உண்டு. ‘சிந்தனைவளர்ச்சி’ என்பதை தடுப்பதோடு தொடர்ந்து சிதைத்தும் வந்திருகின்றன. அதற்கு எளிய உதாரணமாக உலக படங்களையும் உலக இயக்குனர்களையும் பார்க்கும் தற்கால சமுகம் அவர்களை கட்டவுட் வைத்து வரவேற்கும் நிலையும், தனக்கான அடையாளமாக இன்னாரின் ரசிகன் என்று அறிமுகமாவதைபோல இந்த உலக இயக்குனரின் ரசிகன் என்றே தன்னை அறிவுசார் வட்டத்தில் பொருத்த முனையும் மனநிலையூடாக அறிந்துகொள்ள முடியும். தலைவா, தலைவி என்ற பதங்களினூடாக உலக இயக்குனர்களை மட்டுமல்ல சக மனிதர்களின் செயலையும் விதந்து நோக்கும் மனநிலை மிகவும் ஆபத்தான தாழ்வு சிக்கலின் வெளிப்பாடு. சினிமாவை பற்றிய அடிப்படை அறிவற்ற மந்தைகூட்டத்தை உற்பத்தி செய்திருப்பதன் அடையாளம் இது. இந்தியாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் நாயக விம்பம் இலங்கை தமிழ்சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி சினிமாவை சிதைத்து வந்திருகின்றமையை அவதானிக்க வேண்டியது அவசியம்.


சினிமாவின் ஆன்மாவை சிதைக்கும் நாயக விம்பம்

சினிமாவின் திரைக்கதையில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தினை Protagonist என்று குறிப்பிடுவர். Protagonistஇன் ஆசைஇலக்குஅதை அடைவதற்கான தீவிரத்தன்மைஅதற்கான தொடர் நடவடிக்கைள் என்பன திரைக்கதை கட்டமைப்பில் உருவாக்கப்படுகின்றது. Protagonist முக்கியத்துவம் பற்றி The Tools of Screenwriting புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது

‘’The writer does this principally by showing this person, the protagonist, in the grip of some strong desire, some intense need, bent on a course of action from which he is not to be deflected. He wants something- power, revenge, a lady’s hand, bread, peace of mind, glory, escape from a pursuer.’’ 

திரைக்கதையில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு மேலதிகமாக மிகைப்படுத்தப்பட்ட சிறப்புகளுடன் காட்டப்படும் முதன்மை கதாபாத்திரமானது திரைக்கதை கட்டமைப்பை சீர்குலைப்பதோடு சினிமாவின் ஆன்மாவையும் சிதைக்கின்றது.

திரைக்கதையின் கட்டமைப்பை மீறி நாயகன் கதாபாத்திரமானது, சராசரி மனிதனாக இருந்தாலும் அவனுள் சூப்பர் ஹீரோவுக்கான தன்மைகள் இருப்பதாகவும் யாராலும் ஜெயிக்க முடியாத சர்வ வல்லமை கொண்டவராகவும் காட்டப்படுகின்றது. நாயகன் மேலானவனாகவும் ஏனையோர் அவனுக்கு கீழே என்ற சமுக பிரிவினையும் ஏற்படுத்துகின்றது. மேட்டிமைத்தனத்தையும் கதாபாத்திரம் பேசும் ஆண் மைய சிந்தனைகளையும் அபத்த கருத்துக்களும் சரியானவை என்ற எண்ணத்தை திரும்ப திரும்ப பதிய வைக்கப்படுகின்றன.

திரைக்கதையை  தாண்டிய முக்கியத்துவத்தை நமது சினிமாக்கள் நாயக அந்தஸ்துக்காக வழங்குகின்றனஇத்தகைய நாயகவிம்பமானது சினிமாவின் தன்மைகளுக்கு முற்றிலும் எதிரான அணுகுமுறைதிரைக்கதையில்நாயகனை மையப்படுத்திய புகழ்பாடும்  காட்சிகளையும் கொண்டதாக  நாயகனுக்காகவே திரைக்கதை எழுதப்படுகின்றது. நாயகன் ஸ்லோமோஷனில் நடந்து வருவது, நாயகனின் அபத்த கருத்துகளை க்ளோசப் காட்சிகளினால் முன்னிலைப்படுத்துவது  என ஒளிப்பதிவு துறையும் இயங்குகின்றது. படத்தொகுப்பில் நாயகனின் முகத்தையும் உடலையும் காட்டவே உழைப்பினை வழங்குகின்றனர். ஒரு சினிமாவின் அறிவார்ந்த, ஆளுமை சார்ந்த அனைத்து துறைகளும் நாயகனை துதிபாட இயைந்து செயற்படுவதன் காரணமாக சினிமாவின் அடிப்படை அம்சங்கள்  கூட இல்லாது நாயக புகழ்பாடும் துண்டு காட்சிகளின் தொகுப்பாகவே திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.  சினிமாவில் Time & Space என்பது முக்கியம். ஆனால் தமிழ் சினிமாவில் அதனை பற்றிய தெளிவின்மையை நாம் காணலாம். படத்தொகுப்பின் நேர்த்தியின்மை, லைட்டிங் தவறுகள் என எண்ணற்ற தொழில்நுட்ப தவறுகளை நாம் இனம் காணமுடியும். நடிப்பு என்ற துறைக்குள் கூட தோற்றமும், வசன உச்சரிப்பும் நடிப்பு என்று நம்பி செயற்படுகின்றோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இன்மையை காணுவதோடு சினிமாவின் எந்தவித பாய்ச்சலையும் அடையமுடியாத நிலையில் தமிழ் சினிமா இயங்கி வருகின்றது. வருடத்திற்கு நூற்றுக்குமேற்பட்ட படங்கள் வெளியாகும் நிலையில் எத்தனை சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றிருக்கின்றன என்பதை கணக்கிட்டால் அதற்கான விடை என்ன? ஆளுமையும் துறை சார் அறிவும் கொண்ட சினிமா கலைஞர்கள் இல்லாது, நூற்றாண்டுகளை தொட்டிருப்பது தமிழ் சினிமாவின் அவலசாதனையே!.
சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக்களின் மேலாதிக்கம் நிலவி வந்தன. படத்தின் விற்பனையை மையப்படுத்தியே படங்கள் உருவாக்கப்பட்டன. அதை எதிர்த்து உருவான சினிமாக்கள் இயக்குனர்களின் ஆதிக்கத்திற்குள் எடுக்கப்பட்ட படங்களாக மாறின. அப்போது இயக்குனர்களின் சிந்தையில் மாறுபட்ட படங்கள் உருவாகின. சினிமா தொழில்துறையானது   தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கட்டுபாட்டில் இருப்பதை விட நாயகர்களின் கட்டுப்பாட்டிலிருக்கையில் எத்தகைய மலின சினிமாக்கள் உருவாகும் என்பதற்கு தென்னிந்திய சினிமாக்கள் சிறந்த எடுத்துகாட்டு.
ஒரு நடிகனின் திகதிகளுக்கு ஏற்ப படப்படிப்பு தீர்மானிக்கப்படுகின்றது. படத்தின் இயக்குனர் ஏனைய தொழில்நுட்பட கலைஞர்கள் அனைவரும் நடிகரின் தேர்வுகளாக அமைகின்றனர். ஆக ஒரு திரைப்படத்திற்குள் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் நாயகனின் மேலாதிக்கம் நிலவி வருகின்றது. சாதிய முறைகளைபோல  சினிமாவிலும் அதிகார படிநிலை உருவாக்கப்படுகின்றது.

எந்தவித பயிற்சியும் இன்றி புகழுக்கு ஆசைப்பட்டு திரைப்பட துறைக்கு வருவதையும் திரைப்படங்களில் அரசியல் சமுக கருத்துகளை பேசி அரசியல் தலைமை நோக்கி நகர்வதையும் நாம் பார்க்க கூடியதாகவிருக்கின்றது. சினிமாவை தாண்டி சமுகவெளியில் அவர்களின் விம்பம் முன்னிறுத்தப்படுவதை நடைமுறையில் காணலாம்.
நிகழ்வுகளின் அடிப்படையில் கதை சொல்வதையும் மனித வாழ்க்கையை காட்சிப்படுத்தி வெற்றிகொண்ட ஏனைய நாடுகளின் சினிமாதுறைக்கு மத்தியில், நாயக அந்தஸ்தை மையப்படுத்தி கோமாளித்தனங்களுடன் தோற்றுப்போய் நிற்கிறது தமிழ் சினிமா.



பெண் உலகை சிறுமைப்படுத்தும் நாயக விம்பம்

நாயகவிம்பத்தில் ஆண்மேட்டிமைத்தனத்தின் வழியே பெண்களின் உலகம் அணுகப்படுகின்றது; கட்டமைக்கப்படுகின்றது. இதனை திரையில் தெரியும் பெண்கள், திரைக்கு அப்பாலான பெண்கள் என இரண்டு பக்கமும் அலசப்படுதல் அவசியம்.

சினிமாவில் நாயக விம்பத்தை கட்டமைக்க பெண் கதாபாத்திரங்களே அதிகம் உதவுகின்றன. தாயாக, தங்கையாக, காதலியாக, மனைவியாக, வில்லியாக என்று எண்ணற்ற உருவங்களை கொடுத்து அவர்களுக்கான காப்பாளனாக நாயகனை உருவகிப்பதன் மூலமாகவும் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டவனாக நாயகனை சித்தரித்து நாயகனின் பிரதிபலிப்பாக கருதும்  ரசிகர்களுக்கு, இன்னொருவர் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்துகின்றது.

கணவனே கண் கண்ட தெய்வம் என வாழும் பெண் போற்றகூடியவள், தாயாக இருப்பவள் பெருமைக்குரியவள், திமிர் பிடித்த பெண்கள் நாயகனால் திருத்தப்படவேண்டும், நாயகன், நாயகியின் திமிரை அடக்க வலுக்கட்டாயமாக முத்தமிடலாம், முத்தமிட்டவனையே அந்தப் பெண் காதலிக்கவோ திருமணம் செய்யவோ வேண்டும். நிர்வாணமாக ஒரு பெண்ணை ஆண் பார்த்துவிட்டால், அவளை வன்புணர்வு செய்துவிட்டால் அவனையே அந்தப்பெண் திருமணம் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றாள். இல்லையேல் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவளுக்கான சமுக அந்தஸ்து நிலைநாட்டப்படும், கணவன், கயவனாக இருந்தாலும் அவனை திருத்தும் கடமை மனைவிக்கு உண்டு. தாலி என்பது மகத்துவம் மிக்கது. அதனை கழற்றவே கூடாது, விவாகரத்து ஆனாலும் கழற்றாதிருப்பதில் பெண்மையின் மேன்மை பேணப்படும்.  இரண்டாம் திருமணத்திற்கு ஒரு கைம்பெண் தயாராகின்றாள் என்றால், முதலிரவு நடக்க முன்னரே கணவன் இறந்து போய் நித்திய கன்னியாக இருக்க வேண்டும், ஒரு பெண் எத்தகைய உடை அணியவேண்டும் என்பதை நாயகனே தீர்மானித்து வகுப்பெடுப்பான், பொது இடத்தில் விமர்சிக்கும் நாயகனை கண்ணியம் காத்தவனாக எண்ணி நாயகி காதலிப்பாள், பெரும்பாலான பெண்கள் நாயகனை வற்புறுத்தி தனது உடலின் கவர்ச்சியை வெளிப்படுத்தி  காதலிக்க தூண்டுவார்கள், நாயகன் நாயகிகை காதலிக்கையில் அவள் மறுத்தாலும் விடாது தொல்லை செய்து காதலித்து அவளை சம்மதிக்க செய்ய வேண்டும், அந்தபெண்ணை கடத்திச் சென்று தனது காதலை புரியவைக்கும் உரிமை ஆணுக்கு உண்டு. யாரவது ஒரு பெண் தனது சுயம் சார்த்து சிந்திக்கும் தன்மை கொண்டவளாக இருந்தால் படம் முழுவதும் அவள் விவாதப்பொருளாக்கப்பட்டு இறுதியில் நடுத்தெருவில் நிற்கவைக்கப்பட்டு அவள் வாழ்க்கை கேள்விகுறி என்பதோடு இதுதான் நிலை என்பதை மறைமுகமாக கூறி நிறைவு செய்யும் பெருந்தன்மை தமிழ் சினிமாவுக்கு மட்டுமே இருக்கின்றது .

முதல் தலைமுறை படித்த பெண்கள் உருவான சூழலில் கல்லூரிக்கு சென்று காதல் புரியும் நாயகிகளை காட்சிப்படுத்தியமை, காதலுக்காக படிப்பை இடைநிறுத்தும் பெண்கள், படித்த திமிர் கொண்ட யாரையும் மதிக்காத பெண்கள் நாயகனால் திருத்தி காதலிக்கப்படுதல், காதலும் திருமணமுமே ஒரு பெண்ணின் வாழ்க்கை இலக்கு, தாய்மையே பூரணம் போன்ற கருத்துகள்  மக்கள் மத்தியில் திரும்ப திரும்ப பதிய வைக்கப்பட்டன.

மன்னன் படத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் கொண்ட நாயகியை திமிர்பிடித்தவளாக காட்சிப்படுத்தி நாயகனின் வீரத்தின் மூலமாக அவளை திருத்தி கணவனுக்கு தினமும் சமைத்துபோட்டு, அவன் நலனை கவனித்துகொண்டு, அவனது தயவில் வாழும் பெண்ணாக மாறுவதன் மூலம் பெண்மை போற்றப்பட்டதாக தமிழ் சினிமா எடுத்தியம்புகின்றது. கணவன் மனைவியான இருவருக்குள்ளும் ஈகோ சார்ந்த மனநிலை தீர்க்கப்பட்ட பின்னர் நாயகி ஏன் தனது நிர்வாகத்தை தொடர்ந்திருக்க கூடாது? தனது ஆளுமையை துறந்து வீட்டுக்குள் முடங்கிப்போகவேண்டிய அவசியம் ஏன்?  நாயகன் வடிவில் ஆணையும் ஆண் மைய சிந்தனைகளையும்  முன்னிலைப்படுத்தி நாயகி உட்பட பிற பெண் கதாபாத்திரங்கள் வழியாக பெண்ணையும் பெண் சிந்தனைகளையும் சிறுமைபடுத்திக் காட்டுவதை கடமையாகவே செய்தமை தமிழ் சினிமாவின் சாதனை. திருமணம் என்ற இணை சேர்தலும், இன விருத்தியை தாய்மை எனும் புனித பிம்பம் கொடுத்தும் நிறுவும் பாலின ஒடுக்குமுறையை  அன்று முதல் இன்று வரை இத்தகையக திரைப்படங்கள் நிகழ்த்தி வருகின்றன.


இன்று நாயகிகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன என்று கூறினாலும் அதனை ஏற்றுகொள்ள முடியாது. காரணம் அவை அனைத்தும் நாயக விம்பத்தின் நீட்சியாக படைக்கப்படுகின்றன; ஆண் மைய  சிந்தனைகளுடன் உருவாக்கப்பட்டிருகின்றன  என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். சூரியவம்சம் படத்தில் வரும் கலெக்டர் தேவயாணிக்கும் அறம் படத்தில் வரும் கலெக்டர் நயன்தாராவுக்கும் பெரிய வித்தியாசங்களை தமிழ் சினிமா கொடுத்துவிடவில்லை. அதே படத்தில் நயன்தாராவை போல நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஒரு நாயகி நடிக்கவைக்கப்பட்டிருந்தால்...?  என்ற கேள்வியை நமக்குள்ளே கேட்டுப்பார்ப்போம். கம்பீரமாக ஸ்லோமோஷனில் நடத்தல், புல்லட்டில் பயணித்தல், பிறருடைய வாழ்கைக்கான  முடிவினை  தானே எடுத்தல், பெண்கள் புடைசூழ நடனமாடுதல், ஒரு சில நாட்கள் வீட்டை விட்டு பயணம் போவதன் மூலம் வாழ்க்கையை மாற்றிவிட முடியும் என்றளவில் அபத்தமான  சிந்தனை கொண்ட ‘மகளிர் மட்டும்’ ஜோதிகாவை வீரமங்கையாக நிறுவுகின்றார்கள். சாவித்திரியின் ஆளுமையை காட்டுகின்றோம் என்று வெளியான ‘மகாநடி’ படத்தில் சாவித்திரியை புனிதப்படுத்த அவருடைய வாழ்க்கையின் இறுதிக்கால பக்கங்கள் மறைக்கப்பட்டதை காண முடியும். அவருக்கான ஒரு பாடலில், காட்சிகளை பார்த்தால் சாவித்திரி சினிமாவில் நடிக்கிறார், ரசிகர்களுக்கு கையொப்பம் போடுகின்றார், கணவன் குழந்தைகளை கவனிக்கிறார், வீட்டில் உள்ள அனைவருக்கும் பணம் கொடுக்கிறார், சரியாக சாப்பாடு கிடைக்காத தொழிலாளார்களுக்கு தானே சமைத்து பரிமாறுகிறார், அவர் நன்றி சொல்ல அதனை புனனகையுடன் மறுக்கிறார், ஒரு பெண் பாலியல் ரீதியாக சீண்டப்படுவதை பார்த்து அந்த நபரை போட்டு அடிக்கிறார், ஏழை பணக்கார பேதமின்றி பழகுகின்றார், எல்லோருக்கும் தான தருமங்கள் செய்கின்றார் ... இவ்வாறு தொடரும் காட்சிகளை சற்று கவனித்தால் ராமாராவ், நாகேஸ்வரராவ், மோகன்பாபு, சிரஞ்சீவி, பாலாகிருஷ்ணா, நாகர்ஜுன் படங்களில் வந்த அதே காட்சிகளை, அதே செயல்களை கீர்த்தி சுரேஷ் செய்கின்றார். இதில் மாற்றங்கள் எங்கிருக்கின்றன? நாயகவிம்பத்தின் நீட்சியே அன்றி சிந்தனை சார்ந்த மாறுதல்கள் இல்லவே இல்லை.


பெண் இயக்குனர்கள் எடுக்கும் திரைப்படங்களிலும் இத்தகைய ஆண் மைய சிந்தனையின் நீட்சியை காணமுடியும். இறுதிச்சுற்று திரைப்படத்தில் நிஜ குத்துசண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கிற்கு பதிலாக தமிழ் நாட்டை சேர்ந்த நிஜ குத்துசண்டை வீராங்கனை ஒருவரை தேர்வு செய்ய ஏன் முடியவில்லை? ரித்திகாவின் நிறத்திற்கான திரைக்கதையில் அவர் சேரியில் வாழும் சேட்டுபெண் என்ற சமாதானம் வேறு. மாதவன் கதாபாத்திரத்தில் ஒரு பெண் வீராங்கனை நடித்திருந்தால்... குத்துசண்டையில் திறமையிருந்தும் அரசியல் பழிவாங்கலினால் வெளியேறும் ஒரு பெண் வீராங்கனை இன்னொரு பெண் வீராங்கனையை தேடி பயணப்பட்டால் எங்கிருந்து நாயக வீரத்தை நிறுவுவது? காதல் காட்சிகளுக்கு தேவையிருக்காதே? மாற்றுசிந்தனைகளுக்கு தமிழ் சினிமாவில் இடமில்லை.

திரைக்கு பின்னரான பெண்களின் நிலை வேறு. நாயக விம்பம் கதாநாயகியின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. ஒரு நடிகை நட்சத்திர அந்தஸ்து கொண்ட முன்னணி நாயகியாக எவ்வாறு மாறுகின்றார்? அழகும் திறமையும் கொண்டவராக இருந்தால் போதாதது. அவர் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களின் படங்களில் இடம்பெற வேண்டும். விஜய், அஜித், சூர்யா , விக்ரம் என்று நீளும் நடிகர்களின் நாயகியான பின்னரே நட்சத்திர அந்தஸ்து கிடைக்கின்றது. சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா, தம்மன்னா, அசின்  என யாரும் இதில் விதிவிலக்கில்லை. அத்தகைய அந்தஸ்தின் பின்னர் சில  ஆண்டுகளை கடந்ததும் அவர்களது நடிப்பு திறனை நிரூபிக்க வாய்ப்புக்களை தேடுகின்றனர், ஏனையோருக்கு அந்த அந்தஸ்து இல்லை. அவர்கள் துணை நடிகர்களாக மாற்றபடுகின்றார்கள். நாயகிகளின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற சக்தியாக இந்த நடிகர்கள் இருப்பது திரையுலகின் மோசமான விடயங்களில் ஒன்று.


நாயகனை விட நாயகிக்கு சம்பளம் குறைவு, அதே போல ஏனைய துறைகளிலும் ஆணை விட பெண்ணுக்கு ஊதியம் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஏனைய துறைகளை பொறுத்தவரை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு துறையில் பெண்களின் பங்களிப்பு மிக குறைவு, அடக்குமுறைகள் அதிகம் என்பதும் நாயக அந்தஸ்தை  கட்டமைக்கும் பணியாளர்கள் மட்டுமே திரையுலகில் நிலைக்க ஏனையோர் வெளியேற்றபடுதல் மிக இயல்பான ஒன்றாகவே காணப்படுகின்றது. வேறு நாட்டு பெண் இயக்குனர்கள் அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் குரல் எழுப்புவதை போல  அதிகார படிநிலைகள் கொண்ட தமிழ் சினிமாவில் எங்கிருந்து செயற்படுவது என்ற சலிப்பினை பலரிடம் கேட்டிருகின்றேன். தமிழ் சினிமா மாபெரும் சமுக அநீதியை திரையை தாண்டி நிகழ்த்தி வருகின்றது.

திருநங்கைகள், மாற்று திறனாளிகள், மனநலம் குன்றியோர் இன்னும் அதிகமாக நாயக விம்பத்தினால் சிறுமைபடுத்தப்பட்டுள்ளனர். கொலை செய்தல், வன்முறை செயல்களில் ஈடுபடுதல் சட்ட ரீதியாக குற்றம் எனும் போது அதனை நாயகன் செய்வதால் சரி என்று சமுகத்திற்கு சொல்லப்படுகின்றது. தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட விம்பத்தை கொண்ட  அத்தகைய நபர்களுக்கு அரசியல் தலைமைகளை கொடுக்க கூடிய அளவிற்கு நாம் முட்டாள்களாக மாற்றப்பட்டிருகின்றோம்.




இலங்கை தமிழ் சினிமாவில் நாயக விம்பம்


நாயக விம்பத்தின் தாக்கம் இந்தியாவை தாண்டி இலங்கையிலும் காணப்படுகின்றதுஇந்திய சினிமாவின் தாக்கம் இலங்கையில் அன்று தொடக்கம் இன்றுவரை காணப்படுவதால் இதன் தாக்கத்தை அகற்றமுடியவில்லை.  இந்திய திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்பட்ட பின்னர் நமக்கான சினிமா உருவாக  வேண்டும் என்ற நோக்கத்தினால் இலங்கையிலும் திரைப்பட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. சமுதாயம், தோட்டக்காரி போன்ற படங்கள் எடுக்கப்பட்டனநாடகங்கள், வானொலி நாடககங்களின்  தாக்கத்தினால் எடுக்கப்பட்ட தமிழ் படங்களில் அதிகம். 

இலங்கை தமிழ் சமூகமானது ஆண் மைய சிந்தனையும் வர்க்க சாதிய பிரிவினையும் கொண்ட சமூகம் என்பதால் குடும்பக்கதைகள் காதல் மற்றும் தோட்டப்புற கதைகளில் ஆண்களின் மேலாதிக்க மனநிலையை இலங்கை தமிழ் படங்களும் பிரதிபலித்தன. வடிவ ரீதியாக காமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடகம் போலவே அதன் தரம் காணப்பட்டது. சினிமாவுக்கான கூறுகள் இல்லாது பதிவு செய்யப்பட்ட நாடகம் போலவே அனைத்தும் உருவாக்கப்பட்டன.

தென்னிந்திய திரைப்படங்களின் நீட்சியாக இலங்கை தமிழ் சினிமாவை கருதியதால் தென்னிந்தியாவின் தன்மை இங்கும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. வர்த்தகரான V.P. கணேசன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறி தனது கட்டுப்பாட்டில் அனைத்து துறைகளையும் வழிநடத்தியமை அதற்கு உதாரணமாக கூறமுடியும். நடிப்பு பின்னணியற்ற ஒருவர் அன்று திரைத்துறைக்குள் நுழைந்து நாயக விம்பத்தை முன்னிறுத்தினார். அந்த படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதோடு கட்டவுட் வைக்கப்பட்டு  அதற்கு பாலபிஷேகம் நடத்தியதை இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பதியப்பட்டது. சர்வேதச விருது பெற்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பற்றியும்  அவர் ஏற்படுத்திய சினிமாவின் மாற்றங்கள் குறித்தும் சிங்கள சினிமா பெருமையுறுகையில்  இலங்கை தமிழ் சினிமாவின் பெருமையாக பாலாபிஷேக நிகழ்வை நினைவுகூறும்  நிலை என்றால் நாயகவிம்பத்திற்குள் சிக்கிய இலங்கை தமிழ் சினிமாவின் நிலையை புரிந்துகொள்ள முடியும்.

   லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாதிரியான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆளுமை மிக்க இயக்குனர்கள் தமிழில் தோன்றவில்லை. தென்னிந்திய படங்களின் தாக்கத்தோடு படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டன. தென்னிந்திய படங்களின் தொடர் வெற்றி சிங்கள சினிமாவிலும் நாயக விம்பம் பிரதிபலிக்க ஆரம்பித்தது. அதற்கு சிங்கள சினிமா சொல்லும் பெயர் ‘’காமினி பொன்சேகா’’. அன்றைய இலங்கை மக்களின் ஆதர்ஷ நாயகன். பல நடிகர்கள் இருந்தாலும் காமினி பொன்சேகாவின் நடிப்பே அதிகம் ஏற்றுகொள்ளப்பட்டது. அதற்கு காரணம் காமினி பொன்சேகாவின் ஆளுமை. முரட்டுத்தனம் கொண்ட சண்டியராக தோன்றி சண்டையிடும் அதேவேளை, காதலியை வாழ வைக்க முடியாத கையாலாகாத மனிதனாகவும் நடிப்பார். வணிக அம்சங்கள் கொண்ட படங்களையும், வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களையும் நடித்து இயக்குனரின் நடிகன், மக்கள் நடிகன் என்ற இரண்டு பக்கங்களையும் சமன் செய்தார். திரைத்துறையில் அவர் கொண்டாடப்பட்டதற்கு முக்கிய காரணம் காமினி பொன்சேகாவின் தொழில்நுட்ப ஆளுமை. காமினி பொன்சேகாவுடன் பணியாற்றிய உதவி ஒளிப்பதிவாளரை சந்தித்த போது ‘’காமினி பொன்சேகா தனித்துவமான ஆளுமை, காமிரா தொடர்பாகவும் லைட்டிங் தொடர்பாகவும் அறிவுடையவர். எந்த காட்சிக்கு எப்படி தன்னை முன்னிறுத்துவது, தனக்கான லைட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்பதுட்பட அனைத்தையும் கற்றுவைத்திருந்தார். துறை சார்ந்த அறிவும் ஆளுமையுமே அவரின் புகழுக்கான முக்கிய காரணம்’’ என்று கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள சினிமாவில் நாயக அந்தஸ்து தாக்கம் செலுத்தினாலும் காலம் மாற அந்தஸ்தை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்தியவர்கள் புகழ் வெளிச்சத்திலிருந்து கோமாளிகளாக மாற்றப்பட்டனர்.  

போருக்கு முந்தைய இலங்கை தமிழ் சினிமாவை கவனித்தால்  சினிமா சார்ந்த அறிவும் ஆளுமையும் அற்ற நபர்களுடன் தென்னிந்திய தாக்கத்துடன் படங்கள் வெளியானதை பார்க்க முடியும். போருக்கு பின்னரான திரைப்பட முயற்சிகளில் தமிழ் தரப்பினை கவனித்தால் தென்னிந்தியாவில் குறும்படங்கள் எடுக்கும் ‘நாளைய இயக்குனர்‘’ கலாசாரம் உருவான அதேநேரம், இங்கும் அதன் தாக்கத்தில் அதிகமான குறும்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. நாயகவிம்பம் மற்றும் இயக்குனர் புகழ் என்ற கண்ணோட்டத்திலும் Youtubeஇல் அதிக பார்வையாளர்கள் சுற்றத்தாரின் பாராட்டுகள் என்ற குறுகிய சிந்தனை வட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்படங்கள் இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்னை விஜய்யாகவும், விஜய் சேதுபதியாகவும் நிலைநிறுத்த தரமற்ற படங்களை எடுத்து பஞ்ச் வசனங்கள், சண்டை காட்சிகள், காதல் டுயட், நண்பனுக்காக உயிரை விடல், நாயகியை துரத்தி துரத்தி காதலித்தல் என்று க்ளிஷே காட்சிகளை நிரப்பி  கதாநாயகனுக்கு கட்டவுட் வைத்து பாலபிஷேகம் செய்வதை மீண்டும் பெருமையுடன் நிலைநிறுத்த செயற்பட்டு வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் நீட்சியாக இலங்கையிலும் அத்தகைய படங்களை உருவாக்கவே இங்கு பெரிதும் விரும்புகின்றனர்.  சினிமா பற்றிய அடிப்படை அறிவும் புரிதலுமற்ற நபர்களின் வெற்று குப்பைகளை கடந்து வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சினிமாவை சாத்தியப்படுத்தல் இலங்கை தமிழ் சினிமாவில் மிகப்பெரும் கேள்விக்குறியே.

No comments:

Post a Comment